திருமணத்தை மீறிய உறவினால் ஏற்பட்ட தகராறில் ரஞ்சித் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அஜித்குமார் என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்ததை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், கடந்த 10 ஆண்டுகளில் திருமணத்தை மீறிய தகாத உறவினால் நடந்த கொலைகள் தொடர்பாகவும், இது தொடர்பாக மாவட்ட அளவில் குடும்ப ஆலோசனைக் குழுக்களை உருவாக்குவது உள்ளிட்ட 20 கேள்விகளை சென்னை உயர் நீதிமன்றம் மத்திய, மாநில அரசுகளுக்கு எழுப்பியிருந்தது.
அதில், திருமணத்தை மீறிய தகாத உறவினால் சென்னையில் கடந்த பத்து ஆண்டுகளில் 158 கொலைகளும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 1,301 கொலைகளும் நடந்துள்ளதாக கூறப்பட்டது.
இதேபோல், கடந்த 10 ஆண்டுகளில் திருமணத்தை மீறிய தகாத உறவினால் கடத்தல், மிரட்டல், தாக்குதல் உட்பட 213 குற்றங்கள் நடைபெற்றுள்ளதாகவும், சென்னை தவிர்த்து பிற மாவட்டங்களில் 621 குற்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கபட்டது.
சமீப காலமாக திருமணத்தை மீறிய தகாத உறவினால் பெற்ற தாயே குழந்தையை கொலை செய்யும் அதிர்ச்சிக்கரமான சம்பவங்கள் நடைபெறுவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், செல்போனில் எளிதாக ஆபாச படங்களை பார்க்க முடிவதால் பாலியல் குற்றங்கள் அதிகரிக்கிறதா? என்பதை காவல்துறை விசாரிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவுறுத்தியது.