இந்தியாவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையை மேம்படுத்தி அதன் உபயோகத்தை அதிகரிக்க, ஐஐடி மெட்ராஸ், தொழில்நுட்பம் சார்ந்த உதவி செய்யவுள்ளது.
ஐஐடி மெட்ராஸ் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தத் திட்டத்திற்காக தாங்கள் மொபைல் பேமன்ட் போரம் ஆஃப் இந்தியாவுடன் கைகோர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதற்கட்டமாக நாட்டின் அனைத்து பிராந்திய மொழிகளிலும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை சேவையைக் கொண்டு சேர்க்கும் முயற்சியில் இவை இணைந்து ஈடுபடவுள்ளன.
இந்தக் கூட்டு முயற்சி, டிஜிட்டல் சேவை பயன்பாட்டுடன் சேர்த்து, ஆய்வுப் பணிகளுக்கு கைகொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் அரசின் புள்ளி விவரப்படி மாதம் தோறும் 10 கோடி பயனாளர்கள் யு.பி.ஐ. பணப் பரிவர்த்தனை சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த பட்ஜெட்டில் டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டிற்காக 1,500 கோடி ரூபாய் அரசு சார்பில் ஒதுக்கப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்ல இந்தத் திட்டம் துணை நிற்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.