சென்னை ஐஐடியிலிருந்த மாணவர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று டிசம்பர் 1ஆம் தேதிமுதல் ஒருவர், இருவர் எனக் கண்டறியப்பட்டுவந்தது. ஆனால் டிசம்பர் 9ஆம் தேதிக்கு மேல் அதன் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்தது. சென்னை ஐஐடியில் நேற்றுவரை 104 மாணவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
சென்னை ஐஐடியில் படிக்கும் 408 பேருக்கு நேற்றுவரை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் ஏற்கனவே 103 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது.
மேலும் 79 பேருக்கும் கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 183 என உயர்ந்துள்ளது.
மேலும் ஐஐடியில் உள்ள மாணவர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது. ஐஐடி வளாகத்திற்குள் உள்ள வீடுகள் மாநகராட்சியால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டுவருகின்றன. ஆனால் அதே நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் வெளியிலிருந்து வந்த பணியாளர்கள் முகக்கவசம் இன்றி கட்டுமான பணியை செய்துவருகின்றனர்.
சென்னை மாநகராட்சி அலுவலர்களின் அலட்சியத்தால் ஐஐடி மூலம் மீண்டுமொரு ஹாட்ஸ்பாட் உருவாகும் வாய்ப்புள்ளது என சமூக ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.