கீமோதெரப்பி போன்ற புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மெனடியோன், குர்குமின் ஆகிய 'Reactive Oxigen Species' (ROS) மூலக்கூறுகளின் செயல்பாடுகள் குறித்து சென்னை ஐஐடி கல்லூரியின் உயிரி தொழில்நுட்பத் துறை பேராசிரியர்கள் ஜி.கே. சுரேஷ் குமார், கருணாகரன், ஆராய்ச்சி மாணவர்கள் கிழுவீட்டில், சோனல் உமர் ஆகியோர் ஆய்வுசெய்தனர்.
இந்த ஆய்வில், மெனடியோன், குர்குமினை குறிப்பிட்ட நேரத்தில் பயன்படுத்துவதன் மூலம் புற்றுநோய் சிகிச்சை முறைகளை மேம்படுத்தலாம் என அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த ஆய்வின் முக்கியத்துவம் குறித்து கே.கே. சுரேஷ் குமார் கூறுகையில், "உடல் சீராக இயங்கும்போது 'Reactive Oxygen Species' (ROS) மூலக்கூறுகள் உருவாகின்றன. நமது உடலில் நடக்கும் வளர்சிதை மாற்றங்களே (Metablolic) இதற்குக் காரணம்.
இந்த மூலக்கூறுகள் அதிக அளவில் உடலில் உருவானால், செல்களுக்குப் பாதிப்பு ஏற்பட்டு பல நோய்களுக்கு வழி வகுக்கும்.
ஆனால், ROS-யின் அழிக்கும் தன்மையைப் பயன்படுத்தி உடலில் தேவையில்லாத புற்றுநோய் செல்களை நம்மால் அழிக்க முடியும். எனவே தான் இவை கீமோதெரபி போன்ற புற்றுநோய் சிகிச்சைக்குப் பயன்படுகின்றன.
மெனடியோன், குர்குமின் ஆகியவற்றைப் புற்றுநோயாளிகளுக்குக் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கும்போது அது கூடுதல் திறனுடன் செயல்படுகிறது என்பதை இந்த ஆய்வில் கண்டறிந்துள்ளோம். இதற்கு நாங்கள் 'சிம்பிள் டைமிங்' யுக்தி என்று பெயரிட்டுள்ளோம்.
இதன்மூலம், புற்றுநோயால் ஏற்படும் உயிரிழப்புகளை 27 விழுக்காடு வரை குறைக்க முடியும். இந்த யுக்தியைக் கொண்டு புற்றுநோய் சிகிச்சை முறைகளை மேம்படுத்தப் புற்றுநோய் மருத்துவமனைகளுடன் இணைந்து செயல்படவுள்ளோம்.
மேலும், செல்களில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் (Antioxidant) அளவைக் கொண்டு ROS மூலக்கூறுகளின் திறனைக் கணிக்க முடியாது என்பதையும் இந்த ஆய்வில் நாங்கள் கண்டறிந்துள்ளோம்" என்றார்.
இந்த ஆய்வுக் கட்டுரை ஸ்பிரிங்கர் நேச்சர் என்ற புகழ்பெற்ற இதழில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : ஜான் போல்டனின் புத்தகம் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியீடு!