டெல்லியில் விவசாய சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து, சென்னை தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் கறுப்புக் கொடி ஏற்றினர்.
அதனைத்தொடர்ந்து இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். முதலாவதாக பேசிய மாநிலச் செயலாளர் பால கிருஷ்ணன் கூறியதாவது, "இன்றைய தினம் நாடு முழுவதும் மோடி அரசை எதிர்த்து ஒரு துக்க தினமாக அனுசரிக்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்கள். அதனை ஏற்று இன்று கட்சி அலுவலகத்தில் கறுப்புக்கொடி ஏற்றப்பட்டது. டெல்லி விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஏறக்குறைய 400 பேருக்கு மேல் அந்த களத்தில் இறந்துள்ளார்கள். இன்னும் அவர்கள் போராட்டம் நடந்து கொண்டே இருக்கிறது.
ஒரு போராடும் விவசாயிகளின் குரலுக்கு செவிசாய்க்க கூட மோடியால் முடியவில்லை. 1 கோடிக்கு மேற்பட்டவர்கள் இந்த கரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இறந்தவர்களை எரிக்க முடியாமல் கங்கை ஆற்றில் வீசும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும், போதுமான அளவு மருந்து இல்லை. ஆக்ஸிஜன் இல்லை. எதுவுமே இல்லாத மோசமான ஆட்சியாக தான் மோடி அரசு உள்ளது’’ என குற்றம் சாட்டினார்.
2ஆவது அலை காரணமாக 1 லட்சத்து 40 ஆயிரம் பேர் அரசு கணக்கின்படி இறந்துள்ளார்கள். தடுப்பூசியைப் பொறுத்தவரை மத்திய அரசாங்கம் மாநில அரசிற்குத் தேவையான மருந்துகளை கொடுக்கவில்லை. போதுமான உற்பத்தி இல்லை என்றால், மூன்றாம் அலை வருவதைத் தடுத்து நிறுத்த முடியாது என்றார்.