சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் குஷ்பூ, தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இன்று கிரியாப்பா சாலை, தாமஸ் சாலை, குடிசை மாற்று வாரியப் பகுதிகளில் வீதி வீதியாக சென்று அவர் மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது, ஆயிரம் விளக்கு தொகுதிக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை குஷ்பூ வெளியிட்டார்.
குஷ்பூவின் முக்கிய வாக்குறுதிகள்:
- வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் பிறக்கும் பெண் குழந்தையின் பெயரில் ஒரு லட்சம் ரூபாய் வைப்பு நிதி வழங்கப்படும்.
- ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வந்து கொடுக்கப்படும்.
- ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாராகும் மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி மையம் அமைக்கப்படும்.
- கர்ப்பிணிப் பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஒவ்வொரு வார்டிற்கும் ஆம்புலன்ஸ் சேவை வழங்கப்படும்.
- இளம்பெண்களுக்கு ஓட்டுநர் உரிமம் இலவசமாக வழங்கப்படும்.
- நடைபாதைகளில் கடை வைத்திருக்கும் அனைவருக்கும் முத்ரா வங்கிக் கடன் கிடைக்க உதவி செய்யப்படும்.
- இஸ்லாமிய பெண்கள் வீட்டிலிருந்தபடியே சிறு குறு தொழில்கள் தொடங்க நிரந்தர வருமானம் பெற வழிவகை செய்யப்படும்.
- வேலைக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்.
- நூலகங்கள் நவீன மயமாக்கப்படும்.
- மருத்துவ முகாம்கள் நடத்தி மக்களின் நலன் காக்கப்படும்.
- ஆதரவற்ற முதியவர்களுக்கு காப்பகம் அமைக்கப்படும்.
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த குஷ்பூ, ஆயிரம் விளக்கு தொகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை, வீட்டுமனை பட்டா இல்லாதது உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாக பொதுமக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும், பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் சேதமடைந்து இருப்பதாக புகார் தெரிவித்ததாகவும் கூறினார். ஆயிரம் விளக்கு தொகுதி திமுகவின் கோட்டை என்று சொல்லக்கூடிய திமுகவினர், தங்களது ஆட்சிக் காலத்தில் மக்களின் அடிப்படை தேவைகளை கூட தீர்க்காமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? என அப்போது அவர் கேள்வி எழுப்பினார்.
அதிமுக, பாஜகவை எதிரி எனக்கூறும் திமுக, மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு சென்றடைவதை தடுப்பதாகவும் குஷ்பூ சாடினார். தொடர்ந்து பேசிய அவர், பெண்களை அவமானபடுத்துவதும், இழிவாக பேசுவதும், திமுகவின் அடிப்படை கொள்கை என்றும், அதனால் தான் திமுகவில் இருந்து வெளியே வந்ததாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
இதையும் படிங்க: அதிமுகவில் இணைந்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்