கரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடக்கப்பட்ட நிலையில் தீவிர முயற்சிக்குப்பின் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு முதற்கட்டமாக ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் ஜனவரி 16ஆம் தேதி முதல் சுகாதாரத் துறை பணியாளர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் சென்னையில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை செயலர் மற்றும் தமிழ்நாடு கோவிட் -19 தடுப்பூசிக்கான மத்திய அரசின் தொடர்பு அலுவலராக உள்ள ராஜேந்திர ரத்னு, மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினாா். தமிழ்நாட்டில் கோவிட் -19 பாதிப்பின் தற்போதைய நிலை மற்றும் தடுப்பூசி குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் செல்வவிநாயகம், இணை இயக்குநர் வினய், உலக சுகாதார நிறுவனத்தின் அருண்குமார் மற்றும் முக்கிய அலுவலர்கள் பங்கேற்றனர்.