ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், ”ஸ்ரீரங்கம் கோவிலில் உள்ள ஆண்டாள், லட்சுமி இரண்டு யானைகளும் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. அவற்றை கவனித்து வந்த யானை பாகனையும் நீக்கிவிட்டனர். இதனால் அந்த யானைகளுக்கு அடிக்கடி உடல்நிலை குறைவு ஏற்படுகிறது. எனவே, அந்த யானைகளை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், யானை உள்ளிட்ட அனைத்து விலங்குகளையும் பாதுகாப்பதற்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறது? என்ன விதிகள் உள்ளன? என்று வினவியதோடு, தனி நபரோ, கோவில் நிர்வாகமோ யானைகளை வைத்திருப்பதை தடுப்பதற்கு அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினர்.
அண்மையில் இரு பாகன்களால் யானை ஒன்று சித்ரவதை செய்யப்பட்டது குறித்து சுட்டிக்காட்டிய நீதிபதிகள் அமர்வு, அதற்கு கண்டனமும், வருத்தமும் தெரிவித்தது. மேலும், விலங்குகளிடம் கருணை காட்டாத யாருக்கும் நாமும் கருணை காட்டக் கூடாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதோடு, கோவில் யானைகளை பராமரிக்க என்ன நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன என தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை 6 வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: கிணற்றுக்குள் விழுந்த மூன்று காளைகளை அடுத்தடுத்து மீட்ட தீயணைப்புத் துறையினர்!