சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சரான தங்கமணி சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தங்கமணி, அவரது மகன் தரணிதரன், அவரது மனைவி சாந்தி ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நேற்று (டிச.15) 69 இடங்களில் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத 2.16 கோடி பணம், வங்கி லாக்கர் சாவிகள், 1.130 கிலோ தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், குறிப்பாக தங்கமணி வருமானத்தை மறைத்துக்காட்டி, அந்த பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. முறைகேடான பணத்தை கிரிப்டோகரன்சிகளாக மாற்றி முதலீடு செய்ய தங்கமணிக்கு அவரது மகன் தரணிதரன் மற்றும் மருமகன் தினேஷ் குமார் ஆகியோர் உதவியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 69 இடங்களில் ரெய்டு: எப்படி சிக்கினார் தங்கமணி - முழு விவரம்
இதனால் தரணிதரன் மற்றும் தினேஷ்குமார் ஆகியோரின் செல்போன் மற்றும் கணினி ஹார்டுடிஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டு சைபர் ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர். மேலும், கிரிப்டோகரன்சி முறையில் முதலீடு செய்திருப்பதால் தங்கமணி எவ்வளவு கோடி முதலீட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது குறித்த விசாரணை நடத்தி வருவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சோதனையின் போது 19 ஆயிரம் மதிப்பிலான செல்லாத பழைய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதையும் படிங்க: என்னது கிரிப்டோ கரன்சியா... அப்படின்னா என்னன்னே தெரியாதுங்க! - தங்கமணி
தங்கமணி பிட்காய்ன், எதிரியம், அடா, டெத்தர் போன்ற பல வகையான கிரிப்டோகரன்சிகள் மூலமாக முதலீடு செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் எவ்வளவு பணம் கிரிப்டோகரன்சிகளாக முதலீடு செய்துள்ளார் என்பதை கண்டறிய சைபர் நிபுணர்கள் உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் வங்கி லாக்கரை திறந்து ஆய்வு செய்யவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் தங்கமணி, மகன் தரணிதரன், மருமகன் தினேஷ் குமார் ஆகியோர் அழைத்து விசாரணை நடத்தவும் முடிவு செய்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: முறைகேடு பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்த தங்கமணி?