சென்னை ஐஐடி மாணவி ஃபாத்திமா லத்திப் கடந்த 8ஆம்தேதி தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக முதற்கட்டமாக கோட்டூர்புரம் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மாணவியின் தந்தை அப்துல் லத்தீப் கேரள முதலமைச்சர் பினராய் விஜயனை சந்தித்து தற்கொலை தொடர்பான செல்போன் பதிவுகளுடன் புகார் அளித்தார். இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து சென்னை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்தார். சென்னை மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் விசாரணை குழு அமைப்பட்டது.
காவல்துறை கூடுதல் துணை ஆணையர் மெஹலினா தலைமையிலான தனிப்படை காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் பேராசிரியர்கள், தோழிகள், பெற்றோர்களிடம் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து மாணவியின் செல்போன் ஆவணங்கள் சைபர் ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாணவி ஃபாத்திமா தனது செல்போனில் பதிவு செய்து வைத்திருந்ததாக கூறப்படும் தற்கொலை குறிப்புகள் எப்படி மாணவியின் பெற்றோரிடம் சென்றது என்ற கேள்வி சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களுக்கு எழுந்துள்ளது.
வழக்கை முதலில் விசாரித்த கோட்டூர்புரம் காவலர்கள் கவனக்குறைவாக இருந்ததால் தான் ஆதாரங்கள் சென்றிருக்கலாம் என்றும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதனால் கோட்டூர்புரம் காவலர்களிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் விசாரணை நடத்தி உள்ளனர்.
இன்ஸ்பெக்டர் முதல் சம்பவ இடத்திற்கு சென்றவர்கள் அனைவரிடமும் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் தனித்தனியாக விசாரணை நடத்தி உள்ளனர். குறிப்பாக மாணவி தற்கொலை செய்த பிறகு, மாணவியின் செல்போன் பதிவுகள் பெற்றோர் கைக்கு எப்படி கிடைத்தது? முதற்கட்ட தகவல் அறிக்கையில் தற்கொலை தொடர்பான செல்போன் பதிவுகள் குறித்து குறிப்பிடாதது ஏன்? அங்கு ஆதாராங்களை ஏன் கவனிக்க தவறினார்கள்? என மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், சம்பந்தப்பட்ட கோட்டூர்புரம் காவலர்களிடம் விசாரணை நடத்தி உள்ளனர்.
இதைத்தொடர்ந்து சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கேரளா கொல்லம் சென்று மாணவியின் தாயார், சகோதரியிடமும் விசாரணை நடத்த உள்ளனர்.
இதையும் படிங்க: ஐஐடி மாணவி பாத்திமா தற்கொலை குறித்து இயக்குநர் பா. ரஞ்சித் ட்வீட்!