சென்னை: கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை பரவலுக்கு மத்தியில் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 20ஆம் தேதி முதல் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
உணவகங்கள், தேநீர்க் கடைகளில் ஏற்கெனவே 50 விழுக்காடு வாடிக்கையாளர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில், முகக்கவசம் அணிவது, கைகளைச் சுத்தம் செய்வது, பொது இடைவெளியை கடைப்பிடிப்பது ஆகியவற்றைப் பின்பற்றுவதை உணவக உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையாக பாதிக்கப்படும் உணவக தொழில்
முழு ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில், காலை 6.00 மணி முதல் 10.00 மணி வரையிலும், நண்பகல் 12.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரையிலும், மாலை 6.00 மணி முதல் இரவு 9.00 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுவிகி, சொமாட்டோ போன்ற உணவு விநியோக நிறுவனங்களுக்கும் அதே நேரங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள புதிய நடைமுறைகளால் உணவகத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதாக சென்னை உணவகங்கள் சங்கத் தலைவர் ரவி தெரிவித்துள்ளார்.
வார இறுதியில் தளர்வு வேண்டும்
இது தொடர்பாகப் பேசிய அவர், "முதல் ஊரடங்குக்குப் பிறகு தற்போதுதான் தொழில் மூச்சு விடும் நிலைக்கு வந்துள்ளது. மீண்டும் நோய் பாதிப்பைச் சுட்டிக்காட்டி உணவகங்களுக்கு இதுபோன்ற கட்டுப்பாடு விதிப்பது மிகப்பெரிய பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும்.
இதன் காரணமாக உணவகங்களுக்கு வாடகை கட்டுவது, வங்கிகளின் கடனை திரும்பச் செலுத்துவது, தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுப்பது போன்றவற்றில் சிரமம் ஏற்படும். அரசு கூறும் கட்டுப்பாடுகளைப் பின்பற்றினால் 50 விழுக்காடு தொழிலாளர்களை வேலையிலிருந்து நீக்க வேண்டிய நிலை ஏற்படும்.
ஞாயிற்றுக்கிழமை அன்று முழுநேரமும் பொட்டலங்கள் வழங்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். ஞாயிற்றுக்கிழமை போடப்பட்டுள்ள ஊரடங்கும் பொதுமக்கள் வெளியே வர இயலாது. இதனால் வியாபாரம் முற்றிலுமாக பாதிக்கப்படும். இதற்கு மேலும் நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் உணவகங்கள் செயல்பட முடியாது" என்றார்.
20% தான் வணிகம்
தமிழ்நாடு உணவக உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் ராஜ்குமார் பேசுகையில், "தமிழ்நாடு அரசு இதுபோன்ற முடிவை எடுக்கும் போது யாரையும் அழைத்துப் பேசவில்லை, தொழில் துறையினரிடம் கருத்துக் கேட்கவில்லை. தற்போது 50 விழுக்காடு இரு இருக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப் பட்டுள்ளதால் 20 விழுக்காடு தான் வணிகம் நடைபெறுகிறது.
தற்போது உணவகங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகளால் பொதுமக்களும், வியாபாரிகளும் பாதிக்கப்படுவர். அரசின் இந்த முடிவால் வெளிமாநில தொழிலாளர்கள், வெளி மாவட்டத்திலிருந்து தங்கி பணியாற்றுபவர்கள் சிரமத்திற்கு ஆளாவார்கள்" என்றார்.