திருநெல்வேலி: முக்கூடல் அருகே உள்ள சிங்கம்பாறையை சேர்ந்தவர் சகாய பிரவீன். இவர் முக்கூடலில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில், அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த சிலர் இவர் பணிபுரியும் உணவுகத்திற்கு பார்சல் கேட்டு வந்துள்ளனர். தொடர்ந்து, உணவகத்தில் கூட்டம் அதிகமாக இருந்ததால் பார்சல் உணவு கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இதனால், ஆத்திரம் அடைந்த நபர்கள் உணவகத்துள் புகுந்து கடையை சூறையாடியதுடன், உணவகப் பணியாளர் சகாய பிரவினை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில், படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை பொதுமக்கள் மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மக்கள் அனுப்பி வைத்தனர்.
மக்கள் போராட்டம்
தற்போது அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே உணவகப் பணியாளர் வெட்டப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து வியாபாரிகள் முக்கூடல் பகுதியில் கடைகளை அடைத்து, குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாபாரிகளுடன் பொதுமக்களும் சேர்ந்து இப்போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையினர் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், உணவகத்தை சூறையாடிய கும்பலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாரதியார் நூற்றாண்டு நினைவு நாள் முத்திரையை வெளியிட்ட பாஜக தலைவர்கள்