'மதயானைக் கூட்டம்' திரைப்பட இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிப்பில் 'ராவணக் கோட்டம்" படம் உருவாகிவருகிறது.
கண்ணன் ரவி குரூப் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும், தொழிலதிபருமான கண்ணன் ரவி கூறுகையில், "வெளிநாட்டிலேயே அதிக காலத்தை செலவழித்த எனக்கு தமிழ்நாட்டின் மண் சார்ந்த திரைப்படங்கள் மீது அதிக விருப்பம் உண்டு. நான் திரைப்படங்களை தயாரிக்க முடிவு செய்தபோது கிராம பிண்ணனியில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க ஆவலோடு இருந்தேன்.
இந்த சூழ்நிலையில்தான் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் என்னிடம் ஒரு கதையை சொன்னார். உண்மையில் நான் தேடிக்கொண்டிருந்த விஷயங்களுக்கு பொருத்தமான ஒரு கதையாக அது இருந்தது .
நாயகனை தேர்ந்தெடுக்கும்போது தனிப்பட்ட இமேஜ் உடைய ஒரு நட்சத்திர நடிகரை நடிக்க வைக்க விரும்பவில்லை, மாறாக மண்ணின் மைந்தனாக, கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக எல்லோராலும் எளிதாக ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒருவராக இருக்க வேண்டும் என்று நினைத்தோம். அதில் சாந்தனு நடிப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி" என்றார்.
இயக்குநர் விக்ரம் சுகுமாரன் கூறுகையில், "மதயானைக் கூட்டம் வெளியானபோது படத்துக்கு கிடைத்த வரவேற்பும், எனக்கு கிடைத்த பெயரும் மிகவும் மகிழ்ச்சி அளித்தது. அதேநேரத்தில், நான் அடுத்த படத்திற்கு அவசரப்படவில்லை. எனக்கு கிடைத்த பெயரை தக்க வைத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேன். தென் தமிழ்நாட்டில் சில காலம் பயணித்து ஆய்வுகள் மேற்கொண்டேன்.
சாந்தனு பாக்யராஜ் இந்த படத்துக்கு தயாராவதற்காக சில மாதங்களாக, பாரம்பரிய வேட்டி, சட்டையுடனே இருந்தார். மேலும், ராமநாதபுரத்தின் பேச்சு வழக்கில்தான் உரையாடிகிறார். நகரத்திலிருந்து கிராமத்து பையனாக தோற்றம் உட்பட அனைத்திலும் மாறிய அவரை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ராவணக் கோட்டம் படப்பிடிப்பு தொடங்கி நடந்து வருகிறது.
நாயகனை போலவே, கிராமத்து பேச்சு வழக்கு, தோற்றம், உடல் மொழி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் ஒரு நாயகியை தேடி வருகிறோம்" என்றார்.