மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அரசு திட்டங்களை தொடங்கி வைக்கவும், கட்சி சார்பிலான நிகழ்ச்சியில் பங்கேற்கவும் சென்னை வந்துள்ளார். அதைத்தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அரசு விழாவில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், "உலகின் மிக தொன்மையான மொழி தமிழ், அந்த மொழியில் உரையாற்ற முடியாதது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. ஆகையால் அதற்காக மன்னிப்பு கோருகிறேன்.
பிற மாநிலத்தை காட்டிலும் தமிழ்நாட்டில் 97 விழுக்காட்டினர் கரோனாவிலிருந்து மீண்டு உள்ளனர். நீர் பாதுகாப்பு, நீர் மேலாண்மைக்கு தமிழ்நாடு இந்தாண்டு விருது பெற்றுள்ளது. மேலும் அனைத்து திட்டங்களும் இங்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டின் விவசாயிகளுக்கு ரூ.4,400 கோடி வழங்கப்பட்டு உள்ளது.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி, தேஜஸ் விரைவு ரயில் திட்டம், சென்னை சென்ட்ரல் ரயில்வே நிலையத்திற்கு டாக்டர் எம்ஜிர்ஆர் பெயர் உள்ளிட்ட திட்டங்கள் கூட்டணி ஆட்சியில் நிறைவேற்றப்பட்டன.
நீலப் புரட்சியில் தமிழ்நாடு நான்காவது இடத்தில் உள்ளது. விரைவில் முதல் இடத்திற்கு வரும்" எனத் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அவர், அதிமுக ஆட்சிக்கு பாஜக துணை நிற்கும். 10 ஆண்டுகள் மத்திய அரசில் அங்கம் வகித்த திமுக, தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது. ஊழல் பற்றி பேச தகுதி இல்லாதவர்கள் காங்கிரஸ், திமுகவினர்.
குடும்ப அரசியலுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். வாரிசு அரசிலை பாஜக படிப்படியாக ஒழித்துவருகிறது. அதேபோல் தமிழ்நாட்டிலும் வாரிசு அரசிலை ஒழிப்போம்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமித் ஷா மீது பதாகை வீச முயற்சித்த நபரிடம் விசாரணை!