சென்னை: தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் பரவல் மற்றும் உருமாறிய கரோனா தொற்றான ஒமைக்ரான் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது.
அதன்படி மருத்துவத்துறை மற்றும் அரசு உயர் அலுவலர்களுடன் நடைபெற்ற ஆலோசனையை தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பித்தது தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்காக மருத்துவம் மற்றும் துணை மருத்துவக் கல்லூரிகள் தவிர மற்ற அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, அண்ணா பல்கலைக்கழகம், பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகள், தன்னாட்சி மற்றும் தன்னாட்சி அதிகாரம் பெறாத அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைப்பு பெற்ற அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்வரவுள்ள செமஸ்டர் (பருவத்) தேர்வுக்கு மாணவர்கள் தயாராக வேண்டும் எனவும், அரசு விதித்துள்ள வழிமுறைகளை முழுமையாக பின்பற்ற கல்லூரி நிர்வாகத்தினர் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் பதிவாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: குரோம்பேட்டை எம்ஐடி கல்லூரியில் 67 பேருக்கு கரோனா!