தமிழ்நாட்டில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அனைவரும் வாக்களிக்க வகைசெய்வதற்காக அன்றைய நாள் விடுமுறை நாளாக அரசு அறிவித்துள்ளது.
ஆனால், தனியார் நிறுவனங்கள், ஊழியர்கள் வாக்களிக்க அனுமதிக்கும் வகையில், ஊதியத்துடன் விடுமுறை வழங்குவதில்லை எனக் கூறி சேலத்தைச் சேர்ந்த அஹமது ஷாஜகான் என்பவர் பொதுநல வழக்கைத் தாக்கல்செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக, ஊதியத்துடன் கூடிய விடுப்பு எடுக்கும் தனியார் நிறுவன ஊழியர்களின் உரிமை குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் அறிவிக்கை வெளியிட வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கும், தமிழ்நாடு அரசுக்கும் உத்தரவிட்டனர்.
மேலும், இது சம்பந்தமான சட்டவிதிகளை மீறும் தனியார் நிறுவனங்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த அறிவிக்கையில் எச்சரிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.