நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் திறந்துவைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளால் குழந்தைகள் உயிரிழப்பது தொடர்கதையாகிவருகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 2009ஆம் ஆண்டு முதல் பல்வேறு நிகழ்வுகளில் ஐந்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
- 2009 பிப்ரவரி 22: ஆண்டிபட்டி அருகே ஆறு வயது சிறுவன் மாயி சுமார் 30 மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
- 2009 ஆகஸ்ட் 27: திருவண்ணாமலை அடுத்துள்ள தண்டராம்பட்டு பகுதியில் கோபிநாத் என்ற மூன்று வயது சிறுவன் பலியானார்.
- 2011 செப்டம்பர் 8: நெல்லை மாவட்டத்திலுள்ள கைலாசநாதபுரத்தில் 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சுதர்ஷன் உயிரிழந்தார்.
- 2012 அக்டோபர் 1: கிருஷ்ணகிரியில் 50 அடி ஆழத்தில் சிக்கியிருந்த குணா என்ற சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- 2013 ஏப்ரல் 28: கரூர் மாவட்டத்தில் ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்த முத்துலட்சுமி உயிரிழப்பு.
- 2013 செப்டம்பர் 28: திருவண்ணாமலை அருகேயுள்ள புலவன்பாடியில் நான்கு வயதேயான தேவி பலியானார்.
- 2014 ஏப்ரல் 5: விழுப்புரம் மாவட்டத்தையடுத்துள்ள பல்லகச்சேரியில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மதுமிதா மீட்கப்பட்டார், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் மறுநாள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
- 2014 ஏப்ரல் 14: பத்து நாள்களுக்குள் இரண்டாம் சம்பவமாக சங்கரன்கோவிலில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த மூன்று வயது சிறுவன் 6 மணி போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்கப்பட்டார்.
- 2014 ஏப்ரல் 15: திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் பகுதியில் - ரோபோவைக் கொண்டு முயற்சித்தும் தோல்வி. 24 மணி நேரத்தில் குழந்தை சடலமாக மீட்பு
- 2015 ஏப்ரல் 13: வேலூரை அடுத்துள்ள ஆற்காட்டில் 350 அடி ஆழத்தில் விழுந்த குழந்தை மீட்கப்பட்டார். ஆனால் சிகிச்சைப் பலனின்றி பலியானார்
இதேபோல கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமும் நாகப்பட்டினத்தில் 15 அடி ஆழத்தில் விழுந்த இரண்டு வயது குழந்தை பத்திரமாக மீட்கப்பட்டார்
இந்நிலையில் திருச்சி மணப்பாறை அடுத்துள்ள நடுக்காட்டுப்பட்டியில் தனது வீட்டின் முன் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சுஜித், ஆழ்துளைக் கிணற்றில் தவறிவிழுந்தார். வெள்ளிக்கிழமை மாலை 5.40 மணியளவில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.