தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் 2021 வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. புதிய வாக்காளர்கள் பலரும் வாக்களிக்க ஆவலுடன் காத்திருக்கின்றனர். தேர்தல் என்றதும் நினைவுக்கு வரும் விஷயங்களில் தேர்தல் மையும் ஒன்று. வாக்களித்துவிட்டு வரும் குடிமக்கள், தங்கள் விரலில் இடப்பட்ட மையை படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு, ஜனநாயகக் கடமையை ஆற்றியதாக தெரிவிக்கின்றனர். நம் ஜனநாயகக் கடமையில் முக்கிய பங்குவகிக்கும் இந்த தேர்தல் மை குறித்து காண்போம்.
தேர்தல் மை வரலாறு:
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலால் 1960ஆம் ஆண்டு தேர்தல் மை உருவாக்கப்பட்டது. பின்னர் இதன் தயாரிப்பு பொறுப்பு மொத்தமாக மைசூர் பெயின்ட்ஸ் & வார்னிஷ் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. தற்போது இந்நிறுவனம் 30 நாடுகளுக்கு தேர்தல் மையை தயாரித்து விநியோகம் செய்கிறது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு 26 லட்சம் மை பாட்டில்களும், 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலின்போது 21 லட்சத்து 50 ஆயிரம் மை பாட்டில்களும் தேர்தல் ஆணையத்தால் ஆர்டர் செய்யப்பட்டது.
கள்ள ஓட்டு போடுவதை தடுக்கும் விதமாக இந்த மை பயன்படுத்தப்படுகிறது. ஒருமுறை இந்த மையை விரலில் வைத்தால், அது நீங்குவதற்கு சில காலம் தேவைப்படும்.
இந்த மையில் சில்வர் நைட்ரேட் கலக்கப்படுகிறது, 40 நொடிகளில் இது சரும புரதத்தோடு ஒன்றிணைந்து ஊதா நிற கறையை ஏற்படுத்துகிறது. இந்தக் கறையை எந்த ஒரு ரசாயனப் பொருளை கொண்டும் நீக்க முடியாது. சருமத்தின் செல்கள் மாறும்போது இந்தக் கறை நீங்குகிறது.
முதலில் இந்த மை நகமும் தோலும் சேருமிடத்தில் இடப்பட்டது. 2006ஆம் ஆண்டு முதல் ஆள்காட்டி விரலின் உச்சியிலிருந்து நகத்துடன் தோல் சேரும் இடம்வரை கோடு போல் போடப்படுகிறது.
ஒருவர் இருமுறை வாக்களிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது நடுவிரலில் மை இடப்படும்.
’மை’ பிரச்னை:
சமீப காலமாக தேர்தல் மை மீது புகார் எழுந்துவருகிறது. நெயில் பாலிஸ் ரிமூவரை பயன்படுத்தி தேர்தல் மையை அகற்றியதாக 2019 மக்களவை தேர்தலின்போது ஒரு பெண்மணி பதிவிட்டிருந்தார்.
இந்த மையில் கலக்கப்படும் சில்வர் நைட்ரேட்டின் செறிவுத்தன்மையை பொறுத்துதான் இது நீடித்திருக்கும். 7% முதல் 25% வரை இதில் சில்வர் நைட்ரேட் கலக்கப்படுவதாக கூறப்படுகிறது. சரியான விகிதத்தை தயாரிப்பு நிறுவனம் வெளியிடுவதில்லை.
தேர்தலுக்கு விநியோகிக்கப்படும் இந்த மை பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. அதில் போலி மை எதுவும் இருக்கிறதா? என்பது இதன்மூலம் கண்டறியப்படுகிறது.
தற்போது கண்ணுக்கு தெரியாத மையை (invisible ink) உருவாக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன. ஆம்பர் லைட்டில் மட்டுமே இதை காண முடியும். விரைவில் இந்த மை உருவாக்கம் வெற்றிபெற்று நடைமுறைக்கு வரும் என கூறப்படுகிறது.