சென்னையில் நடைபெற்ற உயர் கல்வித்துறை கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித் துறைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, “உயர்கல்வித் துறையில் பொறியியல் படிப்பில் மாணவர் சேர்க்கை சிறிய மாறுதலுடன் சென்று கொண்டிருக்கிறது. பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வரும் அதே நேரத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.
பொறியியல் படிப்பில் மாணவர்கள் குறைவாகச் சேர்ந்துள்ள கல்லூரிகளுக்கு உதவி செய்வது குறித்து ஆலோசனை செய்ய அடுத்த மாதம் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. உயர்கல்வியில் அகில இந்திய அளவில் மாணவர் சேர்க்கை விகிதம் 2035ஆம் ஆண்டு 50 விழுக்காடு இருக்க வேண்டும் என மத்திய அரசு கூறுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் தற்போது அந்த நிலையை அடைந்துவிட்டோம்.
ஆராய்ச்சி படிப்பில் மாணவர்களின் தரத்தை உயர்த்துவது குறித்து அடுத்த மாதம் ஆலோசனைக் கூட்டம் நடத்தவுள்ளோம். மேலும் பொறியியல் படிப்பில் படிக்கும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறனை அதிகரிக்கும் வகையில், பல்கலைக்கழகங்கள் அளவில் திறன் மேம்பாட்டு மையங்களை உருவாக்கி, மாணவர்களுக்கு வேலை வாய்ப்பிற்கான பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
தொழில் நிறுவனங்களுடன், கல்லூரிகள் இணைந்து தொழில் நிறுவனங்களுக்குத் தேவையான திறன்களை மாணவர்களை வைத்து அளிக்கச் செய்வது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயர் கல்வித்துறையில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவும், தரத்தை உயர்த்தவும் உயர்கல்வி மன்றத்தின் மூலம் ரூ.25 கோடி தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக நிதி தேவைப்பட்டால் அதனையும் அரசு வழங்கத் தயாராகவுள்ளது" என்று கூறினார்.