சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றி மக்கள் நல்வாழ்வுத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்மூலம் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின்கீழ், இந்த மருத்துவக்கல்லூரி கொண்டுவரப்பட்டுள்ளது.
அரசுக் கல்லூரியில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகக் கூறி மாணவ - மாணவியர் போராடிய நிலையில் இந்த மாற்றத்தை தமிழ்நாடு அரசு முன்னெடுத்துள்ளது.
முன்னதாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையை அரசே ஏற்று நடத்தும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அரசுக் கல்லூரியில் வசூலிக்கப்படும் கட்டணம்போல் இல்லாமல், அங்கு தனியார் சுயநிதி கல்லூரிகளை விட கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் எழுந்தது. இதனைக் கண்டித்து சிதம்பரம் ராஜா அண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரியைச் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் கடந்த 50 நாட்களுக்கும் மேலாகப் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வந்தனர்.
அப்போது, இவ்விவகாரத்தில் முதலமைச்சர் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்நிலையில், மருத்துவ மாணவர்களின் போராட்டம் காரணமாக, சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மறுதேதி குறிப்பிடப்படாமல் காலவரையின்றி மூடப்பட்டது. இதனால் இக்கல்லூரியில் உள் மற்றும் புறநோயாளிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இதுதொடர்பாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், உயர்கல்வித்துறையின் கீழ் செயல்பட்டு வந்த ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி, இனி சுகாதார மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின்கீழ் செயல்படும் என தமிழ்நாடு அரசு அதிரடியாக அரசாணை வெளியிட்டுள்ளது.
அத்துடன் ராணி மெய்யம்மை நர்சிங் கல்லூரி, ராஜா முத்தையா பல் மருத்துவக் கல்லூரியும் சுகாதாரத்துறையின் கீழ் இயங்கும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதனால் கட்டண உயர்வுக்கு எதிராக, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராடி வந்த மருத்துவ மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, அரசுக்கு தங்களின் நன்றியினைத் தெரிவித்து வருகின்றனர்.