நீட் தேர்வினால் பாதிக்கப்பட்ட அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு சென்னை தியாகராய நகரில் கண்டன போராட்டம் நடைபெற்றது.
இதில், பிரதமர் நரேந்திர மோடி உருவ பொம்மையும் எரிக்கப்பட்டது. இதையடுத்து, தி.நகர் காவல்துறையினர் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமை நிலைய செயலாளர் தபசிகுமரன் உள்ளிட்ட 12 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், உருவ பொம்மை எரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
இதனையடுத்து சென்னை சைதாப்பேட்டை 17ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்தனர். இதை எதிர்த்து உமாபதி உள்ளிட்ட 12 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கில் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 188 பிரிவில், காவல்துறை நேரடியாக வழக்கு பதிவு செய்ய முடியாது, மாஜிஸ்திரேட்டிடம் அனுமதி பெற வேண்டும் என்றும், ஜனநாயக முறையில் நடைபெற்ற போராட்டம் தான் என்றும் இது ஒரு சட்ட விரோத போராட்டம் இல்லை என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு மீதான விசாரணை சதீஷ்குமார் முன்பு நடைபெற்றது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் திருமூர்த்தி ஆஜராகி, ஜனநாயக ரீதியில் நடைபெற்ற போராட்டத்திற்கு எதிராக காவல்துறை பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி உள்ளிட்ட 12 பேர் மீதான குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: பொறியியல் படிப்பு தேர்வு அட்டவணை வெளியீடு