சென்னை: ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநர் சுதன், கடலூர், திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், ஈரோடு, திருச்சி, நீலகிரி விழுப்புரம் ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு இல்லம் தேடி கல்வித்திட்டத்தை இன்று முதல் தொடங்க வேண்டும் என உத்தரவிட்டு உள்ளார்.
மேலும், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களுடன் சேர்க்கப்பட்ட மாணவர்களின் விவரத்தை அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் மையத்தின் விவரம் முழுவதும் அச்சிடப்பட வேண்டும். பயிற்சி மேற்கொண்ட பயிற்சியாளர்கள் மூலம் டிசம்பர் 1ஆம் தேதி முதல் இல்லம் தேடி கல்வித் திட்டத்தினை தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாணவர்களை ஊர்வலமாக அழைத்துச்செல்ல அனுமதி
இல்லம் தேடி கல்வி முயற்சித்து வரும் மாணவர்களை அப்பகுதியில் உள்ள குடியிருப்புவாசிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லலாம். பொதுமக்கள் இல்லம் தேடி கல்வித் திட்டம் மையங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் கற்றல், கற்பித்தல் பொருள்கள் வழங்கி மாணவர்களை உற்சாகப்படுத்தலாம்.
மாணவர்களுக்கு கற்பிக்கும் பொழுது பெற்றோர், ஆசிரியர்கள், கல்வித்துறை அலுவலர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கண்காணிக்கலாம். 'இல்லம் தேடி கல்வித்திட்டத்தில்' கரோனா தொற்றுப் பரவாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும், மேலும் அரசின் சுகாதாரத்துறை மூலமாக வழங்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் முறையாகப் பின்பற்ற வேண்டும்.
குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக தவறான செயல்களில் ஈடுபடாமல் இருப்பதை பள்ளி மேலாண்மைக் குழு முன்பு கண்காணிக்க வேண்டும். மேலும், இது தொடர்பான புகார்களைத் தெரிவிக்கும் தொலைபேசி எண்கள் 1098,14417 ஆகியவற்றை வெளிப்படையாக எழுதி வைக்கவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தன்னார்வலர்கள் உறுதிமொழி ஏற்கும் போது, 'இல்லம் தேடி கல்வி மையத்திற்கு வரும் குழந்தைகளை அன்புடன் பாதுகாப்பாகவும் நடத்துவேன், குழந்தைகளை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தண்டிக்கும் வகையில் நடந்து கொள்ள மாட்டேன் என உறுதிமொழி எடுக்க வேண்டும்' எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
தற்போது பள்ளி மாணவர்கள் அதிக அளவில் பாலியல் குற்றச்சாட்டுகள் நடந்ததாகப் புகார் தெரிவித்து வரும் நிலையில் இல்லம் தேடி கல்வித்திட்ட தன்னார்வலர்களும் பாலியல்ரீதியான தொந்தரவுகள் அளிக்கக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே உறுதிமொழி எடுக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணி: ஹால்டிக்கெட் எப்போது வெளியிடப்படும்?