தமிழ்நாட்டில் வாகன விபத்துகளால் உயிரிழப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துகளில் சிக்கி உயிரிழப்பது வாடிக்கையாகி வருகிறது. இதனைத் தடுக்க தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற உத்தரவு அண்மையில் வெளியாகியது.
இந்நிலையில், சென்னை பூந்தமல்லி போக்குவரத்து காவல்துறை சார்பாக தலைக்கவசம் அணிவதை வலியுறுத்தி குன்றத்தூர் மாதா கலை, அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் தலைக்கவசம் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தி சுமார் 2 கி.மீ வரை பேரணியாகச் சென்றனர். பின்னர் தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கினார்.
மேலும், தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, அவர்களைப் பாராட்டும் விதமாக போக்குவரத்து காவல்துறை அதிகாரி இனிப்பு வழங்கி வாழ்த்து கூறினார். பேரணியின் முடிவில், மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்று அறிவுரைகள் வழங்கப்பட்டது.