சென்னை: சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கரோனா தடுப்பூசி வழங்கும் முகாமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
அப்போது மருத்துவ மாணவர் ஒருவர் கரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்தாதவர்களை எவ்வாறு தாக்குகிறது என்பதையும், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை கரோனா வைரஸ் தாக்க முடியாமல் இருப்பதாகவும் நாடகத்தின் மூலம் விளக்கினார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இதன் மூலம் குறைந்தபட்சம் 20 லட்சம் பேருக்குத் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கிய முகாமிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்படாது. தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கரோனா தடுப்பூசி நேற்றிரவு இரவு நிலவரப்படி 2 கோடியே 93 லட்சம் மக்களுக்கு முதல் டோஸ், 80 லட்சம் மக்களுக்கு இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது. அரசு மூலமாக 3 கோடியே 74 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. தனியார் சார்பாக 22 லட்சத்து 8 லட்சம் மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 48 விழுக்காடு பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது தவணை 13 விழுக்காடு பேருக்குச் செலுத்தப்பட்டுள்ளது. அதே போல் 3.31 லட்சம் பாலூட்டும் தாய்மார்களுக்கும், 1.72 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் தடுப்பூசிகள் இதுவரை செலுத்தப்பட்டுள்ளன.
மேலும், முதல் டோஸ் தடுப்பூசி அதிகமாக செலுத்திக்கொண்ட மாவட்டம் என்று பார்த்தால் நீலகிரி 71 விழுக்காடும், கோயம்புத்தூர் 70 விழுக்காடும், காஞ்சிபுரம் 65 விழுக்காடும், சென்னை 62 விழுக்காடும், திருப்பூர் 60 விழுக்காடு என உள்ளது. இரண்டாவது டோஸ் சென்னை 30 விழுக்காடும், நீலகிரி 25 விழுக்காடும், பூவிருந்தவல்லி 20 விழுக்காடும், விருதுநகர் 17 விழுக்காடும், காஞ்சிபுரம் 14 விழுக்காடாக உள்ளது.
குறைவாகத் தடுப்பூசி செலுத்தியுள்ள மாவட்டம் என்றால் தூத்துக்குடி 34 விழுக்காடும், திருப்பத்தூர் 36 விழுக்காடும், மயிலாடுதுறை மற்றும் கடலூர் 37 விழுக்காடாக இருக்கிறது.
கரோனா தொற்று பரவலைப் பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், ஈரோடு, தஞ்சாவூர் போன்ற மாவட்டங்களில் 100க்கும் மேல் எண்ணிக்கையில் உள்ளது. மேலும் மற்றும் சில மாவட்டங்களில் நோய்த் தொற்று விகிதம் சற்று அதிகமாக உள்ளது. எனவே முகக்கவசம், தனி மனித இடைவெளி, தடுப்பூசி செலுத்திக் கொள்வது மிக முக்கியம் எனத் தெரிவித்தார்.