சென்னை: பெரும்பாலான மாணவர்கள் தொழில் நுட்பத்துறையில் படிக்கவும், பணியாற்றவும் விரும்புகின்றனர். அதனடிப்படையில் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுவருகின்றன. அதாவது மாணவர்களுக்குப் படிக்கும் போதே பயிற்சி வழங்கும் முறையை பல கல்லூரிகள், நிறுவனங்களில் தொடங்கியுள்ளன.
அந்த வகையில், ஹெச்சிஎல் நிறுவனம் 2017ஆம் ஆண்டு முதல் 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை தேர்வுசெய்து, பயிற்சி அளித்து வருகிறது. இந்த ஓராண்டு பயிற்சித்திட்டத்திற்கு TechBee எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த படிப்பில் சேர்வதற்கு HCL SAT என்ற நுழைவுத்தேர்வை, 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் எழுத வேண்டும். இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் HCL தேர்வுக் குழுவுடனான நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.
இதன்பின்னர் படிப்புடன் கூடிய பயிற்சி வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சியின் போதே ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இதையடுத்து முழுநேர வேலை வழங்கப்படும்போது, ரூபாய் 2–2.20 லட்சம் வரை சம்பளமும் அளிக்கப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்கள் https://www.hcltechbee.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், ஹெச்சிஎல் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளது. இது நாளை(ஜூன் 25) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடக்கிறது. ஏற்கெனவே மகாராஷ்டிரா, மணிப்பூர் மாநில அரசுகளுடன் ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு படிப்புடன் பயிற்சி அளித்து வருகிறது. இதன்மூலம் அரசுப்பள்ளி மாணவர்கள் 2,000 பேர் பயிற்சியில் சேர உள்ளனர்.
ஓராண்டு பயிற்சியினை முடித்ததும் HCL நிறுவனத்திலேயே வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது. அதோடு வேலை செய்யும் போதே பிட்ஸ் பிலானி, சாஸ்திரா பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் போன்ற கல்வி நிறுவனங்களில் பகுதிநிதி உதவியுடன் உயர்கல்வி பயிலவும் HCL உதவுகிறது.
ஒரு பயிற்சியாளருக்கு பயிற்சி கட்டணமாக மொத்தமாக ரூ.1 லட்சம் திறன் மேம்பாட்டுக் கழகத்தால் வழங்கப்படும். தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் இந்த வருடம் HCL மூலம் 2,000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சியளித்து அவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட உள்ளது.
இதையும் படிங்க: மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை: மாணவிகளின் விவரங்களைப் பெற சிறப்பு முகாம் நடத்த உத்தரவு!