சென்னை: திருச்செந்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு அரசின் அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக் குறிப்புகளை வெளியிடுவதற்காக மாநில அரசின் இணையதளம் உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கரோனா தொடர்பான அனைத்து அறிவிப்புகளையும், புள்ளிவிவரங்களையும் வெளியிட "ஸ்டாப் கரோனா" என்ற இணையதளம் பயன்பாட்டில் உள்ளதாகவும், அதில் அனைத்து அரசாணைகளும் வெளியிடப்படுவதில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், 2021ஆம் ஆண்டு தொடங்கியது முதல் மே 12ஆம் தேதி வரை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை மூலம் 14 அரசாணைகள் பிறப்பிக்கப்பட்ட போதும், இதுவரை ஐந்து அரசாணைகள் மட்டுமே இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதியளித்த அரசாணை, இதுவரை இணையதளத்தில் வெளியிடப்படவில்லை என்றும், கரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் பிற அறிவிப்புகள், அரசாணைகளும் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சையால் நோயாளி மரணம்? - சுகாதாரத் துறை மறுப்பு!
அதனால் கரோனா தொடர்பான அறிவிப்புகள் மட்டுமல்லாமல் அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள், பத்திரிகை செய்திக்குறிப்புகளை இணையதளங்களில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அனைத்து அரசாணைகள், அறிவிப்பாணைகள் இணையதளங்களில் பதிவேற்றம் செய்யப்படுகிறதா? என்பது குறித்து விளக்கமளிக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றி பரிந்துரைத்தது.