உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு நீதி வேண்டி திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி தொண்டர்கள் படைசூழ ஆளுநர் மாளிகை நோக்கி இன்று (அக்.5) மாலை பேரணியாக சென்றார்.
இந்தப் பேரணியிரல் திமுகவினர் பெருந்திரளாக கலந்துகொண்டனர். இந்நிலையில் பேரணியில் கலந்துகொண்ட கனிமொழி உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவலர்கள் கைதுசெய்து, கிண்டியிலுள்ள மண்டபத்தில் தங்கவைத்தனர். முன்னதாக இந்தப் பேரணியை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்து உரை ஆற்றினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், “நீதி, நியாயம் கேட்க இந்தப் போராட்டம் நடைபெறுகின்றது. பாதிக்கப்பட்டு உயிரிழிந்த பெண்ணின் உடலை கூட காட்டாமல் எரித்துள்ளனர். பெண் குடும்பத்திற்கு ஆறுதல் தெரிவிக்க சென்ற ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியை தடுத்து நிறுத்தியுள்ளனர்.
மேலும் காவலர்கள் அவர்களை தள்ளி விட்டுள்ளனர். அவர்கள் மட்டும் கீழே விழுந்துள்ளதாக இதை கருதமுடியாது ஒட்டுமொத்த ஜனநாயகத்தையே கீழே தள்ளி உள்ளனர்.
பெண்களுக்கு எதிராக அதிக பாலியல் குற்றங்கள் நடந்த மாநிலம் எது என்று பார்த்தால் அது உத்தரப் பிரதேசமாக உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் நாம் பொள்ளாச்சி சம்பவத்தை மறக்க கூடாது. மறக்கவும் முடியாது. இதில் நீதி, நியாயம் கிடைக்கவில்லை, காரணம் ஆளும் கட்சியினருக்கு அதில் தொடர்பு உள்ளது.
மேலும், இப்படிப்பட்ட பாஜக அரசுக்கு அடிமையாக அதிமுக உள்ளது. திமுக பொறுத்தவரை எந்த விசாரணை என்றாலும் நீதிமன்றம் கண்காணிப்பில் நடக்க வேண்டும். மேலும் தமிழகத்தை பொறுத்தவரை திமுக விரைவில் ஆட்சி அமைக்கும். பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தனி நீதிமன்றம் அமைக்கப்படும் என்று தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி தலைமையில் தீப்பந்தம் ஏந்தி திமுக மகளிர் அணி சென்னை ஆளுநர் மாளிகை நோக்கி பேரணியாக சென்றனர்.
முன்னதாக மேடையில் பேசிய திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, “உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகிய குற்றவாளிகள் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் யார் பெண்களை பாதுகாப்பது. பாஜக ஆட்சிக்கு பிறகு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன.
பாரத் மாதா கி ஜெய் என்று கூறும் உத்தரப் பிரதேசத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகம். பசு மாடுகளுக்கு பாதுகாப்பு உள்ளது, ஆனால் பெண்களுக்கு இல்லை. பெண்களை எந்த மதமும் பாதுகாக்கது மனிதநேய மிக்க தலைவர்களால் மட்டுமே முடியும்” என்றார்.
அப்போது, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், திமுக துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் எ.வ.வேலு உள்ளிட்டோர் மேடையில் இருந்தனர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “உத்தரப் பிரதேச விவகாரத்தில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை நடத்த வேண்டும். ஆளுநர் சந்திக்க சென்ற எங்களை ஏன் கைது செய்தனர் என்று தெரியவில்லை” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பள்ளிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் - மத்திய அரசு வெளியீடு
!