இது குறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், "உரிமைகளுக்காக போராடி வென்ற உழைப்பாளிகளின் உயர்வைப் போற்றும் மே தினத்தில், ஒவ்வொன்றையும் நமக்கு உருவாக்கித் தந்திருக்கும் உழைப்பாளர்களை நன்றியோடு வாழ்த்துகிறேன்.
உழைப்பாளர்களாலும், அவர்களின் உழைப்பால் மட்டுமே இந்த உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை மே தினம் நமக்கு உணர்த்திக்கொண்டிருக்கிறது. ‘உழைப்பவரே உயர்ந்தவர்’ என்பதை உரக்கச் சொல்லும் பொன்னாளாகவும் இந்த நன்னாள் திகழ்கிறது. கரோனா போன்ற பேரிடர் நேரங்களில் கூட எத்தனையோ பேரின் உழைப்புதான் மனித குலத்தைக் காப்பாற்றுகிறது. எப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டாலும் நம்முடைய உணவுக்காக, சுகாதாரத்திற்காக, உயிருக்காக, மீட்சிக்காக உழைக்கிற அத்தனை பேரையும் போற்றிட வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது.
உழைப்பவர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து பலன்களையும் தடையின்றி கொடுக்கிற சமூகமும், அரசாங்கமுமே சிறந்ததாக திகழ முடியும்.
எனவே, அரசு, தனியார் உட்பட எந்த பணியிடத்திலும் உழைப்புச் சுரண்டலை அனுமதிக்காமல், உழைப்பவருக்கே எங்கும் முதல் மரியாதை என்பதை நடைமுறையாக்குவோம். ‘நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே…’ என்ற எம்ஜிஆர் பட பாடல் வரிகளை உண்மையாக்குவோம். உழைப்பவர்களின் கனவுகள் அனைத்தும் நனவாக இதயம் நிறைந்த மே தின வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.