காஞ்சிபுரம் குன்றத்தூரைச் சேர்ந்த அலமேலு என்பவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த மே 19ஆம் தேதி அனுமதிக்கபட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பெற்று வந்த அவர், மே 22ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதனால், மருத்துவ நிர்வாகம் அவரது உடலை எரித்துவிட்டதாக கூறப்படுகிறது.
மருத்துவமனையில் ஆர்ப்பாட்டம்
இந்நிலையில், ஆகஸ்ட் 9ஆம் தேதி அலமேலுவின் உறவினர்களை தொடர்பு கொண்ட மருத்துவமனை நிர்வாகம், அலமேலுவின் உடலை பெற்றுகொள்ளுமாறு தெரிவித்துள்ளது. இதனால், அதிர்சியடைந்த உறவினர்கள் உடனடியாக மருத்துவனைக்கு விரைந்தனர்.
ஏற்கனவே அலமேலுவின் உடல் என கூறி ஒருவரின் உடலை தங்களிடம் காண்பித்து அந்த உடலை எரித்துவிட்டதாகவும், தற்போது மீண்டும் அலமேலுவின் உடலை பெற்றுக்கொள்ளுமாறு கூறிய மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து அவரது உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மனித உரிமை ஆணையம் விசாரணை
மேலும், மருத்துவமனை நிர்வாகம் அந்த உடலை எரிக்க 3 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் குற்றஞ்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். பின்னர், தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது சம்பந்தமாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில் தாமாக முன் வந்து விசாரணைக்கு எடுத்து கொண்ட மாநில மனித உரிமை ஆணையம், இது தொடர்பாக விசாரணை நடத்தி ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையத்தின் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: ஒரே நாளில் 25 ஆயிரம் பேருக்கு கரோனா பாதிப்பு!