மாநில அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை, பான் மசாலா உள்ளிட்ட பொருள்கள் தமிழ்நாட்டில் கிடைப்பதில் அமைச்சர்களுக்கும், அரசு அலுவலர்களுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், இந்த வழக்கு, சென்னை 8ஆவது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
சிபிஐயை தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் 2018ஆம் ஆண்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தது. இந்த வழக்குக்கான குற்றப்பத்திரிகையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி செல்வக்குமார் முன்னிலையில் அமலாக்கத்துறையின் வழக்கறிஞர் என்.ரமேஷ் தாக்கல் செய்தார்.
அதில், குட்கா விற்பனை விவகாரத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிமுக முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா, கிடங்கு உரிமையாளர் மாதவ ராவ், உணவு பாதுகாப்பு அலுவலர் செந்தில்முருகன், சுகாதாரத்துறை அலுவலர் சிவக்குமார், கலால் வரித்துறை அலுவலர் நவநீத கிருஷ்ண பாண்டியன், கிடங்கு உரிமையாளர் உமாசங்கர் குப்தா உள்பட 27 பேர் மற்றும் மூன்று நிறுவனங்களுக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், சிபிஐ பதிவு செய்த வழக்கில் தமிழ்நாட்டு காவல்துறை, உணவு பாதுகாப்புதுறை, வணிக வரித்துறையை சேர்ந்த அலுவலர்கள் தலா இருவர், கலால் வரித்துறையை சேர்ந்த ஒருவர் என 7 அரசு ஊழியர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாகவும், அரசு ஊழியர்கள் மீது அதிகார துஷ்பிரயோகம், கூட்டுசதி, சட்டவிரோதமாக அன்பளிப்பு கேட்பது உள்ளிட்ட பிரிவுகளில் சிபிஐ வழக்குப் பதிந்துள்ளதாகவும் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, 2013ஆம் ஆண்டு மே மாதம் முதல் 2016 ஜூன் மாதம் வரை சட்டவிரோத விற்பனை மூலமாக 639 கோடியே 40 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டியுள்ளதாகவும், அந்த பணத்தின் மூலம் ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகிய இடங்களில் அரசு அலுவலர்கள் சொத்துக்களை வாங்கி இருப்பது அமலாக்கத்துறை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் என்.ரமேஷ் விளக்கம் அளித்தார்.