தமிழ்நாடு சிறு சோப் மற்றும் டிடெர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பாக வரும் 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாள் கண்காட்சி நடைபெறுகிறது. இதில் சிறிய அளவில் சோப் மட்டும் டிடெர்ஜென்ட் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களது தொழிலை மேலும் வளர்க்கவும், புதிய தொழில் நுட்பங்களுக்குத் தங்களை தயார்படுத்திக் கொள்ளவும் வழிகாட்டுதல் வழங்கப்படும்.
மூலப் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், நவீன இயந்திரங்கள் வழங்கும் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் சுமார் 75 ஸ்டால்களில் தங்களது சேவையை விளக்குவர்.
இதற்காக வெளிநாட்டு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறிய அளவிலான சோப் மற்றும் டிடெர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் இதில் பங்கேற்பார்கள்.
இதுதொடர்பாக பேசிய அந்த அமைப்பின் தலைவர் தனபால்:
" சோப் உற்பத்தி செலவைக் குறைப்பது எப்படி, மின்சாரத்துக்கு ஆகும் செலவைக் குறைப்பது எப்படி போன்றவை குறித்து தெளிவாக விளக்கப்படும். சிறிய அளவில் தொழில் செய்பவர்கள் புதிய முதலீடு செய்யவும், கடன் பெறவும் அச்சப்படுவர். அவர்களுக்கு ஆலோசனை வழங்க வங்கியாளர்களும் இந்தக் கண்காட்சியில் கலந்து கொள்வர்.
நாடு முழுவதும் இருந்து சோப் தயாரிப்பு நிறுவனங்கள் வருகின்றன. இதன்மூலம் சந்தை வளரும், வேலை வாய்ப்பு அதிகரிக்கும். மாநிலத்திற்குள்ளேயே இருப்பவர்களை சந்தையை விரிவுபடுத்த வாய்ப்பு கிடைக்கும். மார்கெட்டிங் குறித்து பயிற்சி அளிக்கிறோம். உற்பத்தியாளர்கள் சங்கத்தில் வீடுகளில் வைத்து குடிசைத் தொழிலை செய்பவர்கள் தொடங்கி பெரு நிறுவனங்கள் உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
பணவீக்கம் அதிகரித்துள்ளதால் சோப் விலை சற்று உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி அமலாக்கத்திற்கு முன்பாக சோப் உள்ளிட்ட பொருட்களுக்கு 28 விழுக்காடு வரி விதிக்கப்பட்டது. தற்போது அதன்மீது 18 விழுக்காடு வரி விதிக்கப்படுகிறது. இதனால் ஜிஎஸ்டி அமலாக்கத்தால் எங்களுக்குப் பாதிப்பில்லை.
பெரு நிறுவனங்களின் கவனம் டிடெர்ஜென்ட் பவுடர், லிக்யூட் போன்றவையை நோக்கியே உள்ளது. எங்களது சந்தை ஊரகப் பகுதிகளில் உள்ளது. ஆனால், அவர்கள் எங்களுக்குப் போட்டியாக விளங்கவில்லை. தற்போது ஒட்டு மொத்தமாக தமிழ் நாட்டில் உள்ள சிறிய சோப், டிடெர்ஜென்ட் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெறுகிறது" என்று கூறினார்.
இதையும் படியுங்க: 'ஹேப்பி நியூ இயர்': ஜியோவின் புத்தாண்டு ஆஃபர் மழை!