சென்னை: நாடு முழுவதும் ஜிஎஸ்டி தொடங்கி இன்று 5ஆவது ஆண்டு கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னை கலைவாணர் அரங்கில் ஜிஎஸ்டி கவுன்சில் கொண்டாடிய 5ஆவது தேசிய ஜிஎஸ்டி தினத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துக் கொண்டார். வருவாய் மற்றும் சுங்கவரித் துறையில் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கங்களை வழங்கினார்.
அதன் பின்னர் பேசிய ஆளுநர் ஆர்.என். ரவி, "நம்முடைய சுதந்திர தினம் குடியரசுத் தினம் உள்ளிட்டவற்றைவிட இந்த தினம் மிக முக்கியமாது. பிரிட்டிஷ்காரர்கள் நம்மை ஆண்ட பிறகு மிக முக்கியமான நாளாக 5ஆவது ஜிஎஸ்டி தினம் பார்க்கப்படுகிறது. ஒரு பாரதம் உன்னத பாரதம் என்பது அரசியல் சட்ட அமைப்பிலேயே உள்ளது. இந்த சமூகத்தை நாம் எந்த பார்வையில் பார்க்கிறோம் என்று உள்ளது. இதை பிரித்து பார்த்தால் பல விதமாக பார்க்கலாம்.
கூட்டாட்சி பற்றி பேசுவது மிகவும் முக்கியம். அதே சமயம் இந்திய நாடு மிக நீண்ட ஆண்டுகளுக்கு முன்பே பிறந்து விட்டது. இந்த நாடு பல மாநிலமாக பிரிந்து உள்ளது. ஆனால் நம் முன்னோர்களின் பாரத நாடு என்ற எண்ணம் முற்றிலும் வேறுபட்டது. இந்த நாடு ஒரு அகண்ட பாரதம். பாரதம் என்பது ஒன்றே. பாரதத்தில் பல மொழி, கலாச்சாரம் உள்ளன. அதுவே பாரதத்தின் அழகாக இருக்கிறது.
விவேகானந்தர் மற்றும் பாரதியாரும் பாடலில் அகண்ட பாரதம் பற்றி கூறியுள்ளனர். வேதம் நிறைந்த தமிழ்நாடு எனப் பாடி உள்ளனர். இந்த நாட்டில் பல சந்தைகள் உள்ளன. இதில் ஏதாவது தொழில் செய்ய வேண்டும் என்றால் பல பிரச்சனைகள் உள்ளன. ஆனால் சர்தார்பட்டேல் எப்படி இந்த நாட்டை ஒன்றாக இணைக்க முயற்சி செய்தாரோ, அதேபோல தான் ஜிஎஸ்டி மூலம் ஒரே நாடு ஒரே வரி என்பது இணைகிறது. தமிழ்நாட்டில் கடந்த 4 ஆண்டுகளில் ஜிஎஸ்டி மூலம் 35 கோடி முதல் 1,500 கோடி வரை லாபம் கிடைத்துள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் உலக அரங்கில் இந்தியா பலமான நாடாக இருக்கும்" எனப் பேசினார்.
இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு