இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் செயலாளர் நந்தகுமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் இளநிலை உதவியாளர், நில அளவையாளர், கிராம உதவியாளர் பணிக்கான தேர்வை நடத்தியது. இதற்கான தரவரிசைப் பட்டியலை கடந்த 2019 நவம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது.
அதன் அடிப்படையில் புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேர்வர்கள் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதிக்குள் அரசு இ-சேவை மையங்களில் தங்களின் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் பின்னர் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறும் தேதி அறிவிக்கப்படும்.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டதால் அவர்கள் பணிக்கு தேர்வு செய்ததாக கருத முடியாது. இடஒதுக்கீடு உள்ளிட்ட தேர்வாணைய விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வில் தரவரிசை பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தியது. தரவரிசை பட்டியலில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்களில் 39 பேர் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றிருந்தனர்.
இதுகுறித்து அரசு பணியாளர் தேர்வாணையம் விசாரணை நடத்தியதில், முறைகேட்டில் ஈடுபட்டதாக 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்துள்ளது.
தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்ற 39 தேர்வர்கள் ரத்து செய்யப்பட்டனர். இதையடுத்து புதிதாக சான்றிதழ் சரிபார்ப்புக்கு தரவரிசை பட்டியலில் அடுத்த நிலையில் இருந்தவர்களை அரசு பணியாளர் தேர்வாணையம் அழைத்துள்ளது.