சென்னை: ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டின் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ஆம் தேதி அன்று கிராமசபைக் கூட்டங்கள் நடைபெறும்.
காலை 11 மணி அளவில் கூட்டங்கள் நடைபெறும். அதில், ஊராட்சிகளின் 2022-23ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களுக்கான வரவு செலவு அறிக்கை, மேற்கொள்ளப்பட்ட பணிகள், பணிகளின் முன்னேற்ற நிலை, மத்திய மாநில அரசு திட்டங்களுக்கான பயனாளிகள் தேர்வு, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், நமக்கு நாமே திட்டம், தூய்மை பாரத இயக்கம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்,
திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மை, விவசாயம் மற்றும் உழவர் நலத்திட்டங்கள், குழந்தைகள் மற்றும் முதியோர் உதவி எண் மற்றும் இளைஞர்களுக்கான திறன் பயிற்சி திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இவ்வாறான கிராம சபைக் கூட்ட விவாதங்கள், பயனாளிகள் தேர்வுகளில் ஈடுபடுதல் மற்றும் அரசால் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்வது, அவ்வூராட்சியில் வாழும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து வாக்காளர்களின் முக்கிய கடமையாகும். மேலும் கிராம சபைகளில் பொதுமக்கள் கலந்து கொள்ளும்போது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் நாளை பொது விநியோகத்திட்ட மக்கள் குறைதீர் முகாம்