இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறுகையில், ’ஆட்டோவில் பெண்கள் பயணம் செய்வது தற்போது அதிகரித்துள்ளது. ஐடி பெண்களும், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களும் நேரம் காலமின்றி ஆட்டோவில் செல்வது வாடிக்கையாகியுள்ளது. பணத்தை தவறவிட்ட பயணியிடம் பணத்தை ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர் என அவ்வப்போது செய்தித் தாள்களில் தலைப்புச் செய்தி படித்தாலும், இரவில் ஆட்டோவில் பெண்கள் பயணப்படும்போது அச்சமடையத்தான் செய்கிறார்கள்.
இந்நிலையில், பெண்களின் பாதுகாப்புக் கருதி சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் ஆபத்தான நேரங்களில் உதவும் வகையில் ஜிபிஆர்எஸ் கருவிகள் பொருத்தப்பட்ட எலக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்படவுள்ளன. இதில் பேனிக் பட்டன் என்ற சிறப்பம்சம் பொருத்தப்பட்டுள்ளது.
ஆட்டோவில் பயணிக்கும் பெண்களுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் உடனே இந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் சென்றுவிடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆபத்து நிலையில் மட்டுமல்ல, ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணம் வசூலித்தாலும் இந்த பொத்தானை அழுத்தலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு ஆட்டோ சங்கத் தலைவர் பாலசுப்ரமணியம், ‘ஜிபிஆர்எஸ் வசதி பொருத்த வேண்டுமென்றால் அரசு அதற்கான ஊழியர்களையும், வசதிகளையும் செய்து தர வேண்டும்’ என்று கோரிக்கைவிடுத்துள்ளார்.