தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகத்திற்கான தரவரிசைப் பட்டியலை, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று வெளியிட்டார். அப்போது முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு அவர் சேர்க்கை ஆணையை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “ மீனவக் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் 5% உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில், மீன்வள அறிவியல் படிப்பிற்கு 6 இடங்களும், மீன்வளப் பொறியியல் படிப்பிற்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு தேவையான அனைத்து உதவித் தொகைகளையும் மீன்வள நலவாரியமே ஏற்றுக்கொள்ளும். இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டவர்களின் பிள்ளைகள், கடலுக்குச் சென்று காணாமல் போனோரின் பிள்ளைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
நல்லபொழுதை எல்லாம் தூங்கிக் கெடுத்து, தானும் கெட்டு நாட்டையும் கெடுத்தவர்கள் திமுக வினர். அவர்கள் குறட்டை விட்டதோடு, கோட்டையையும் விட்டவர்கள். ஆனால், அதிமுக மக்களோடு மக்களாக வாழ்ந்து பழகிய கட்சி. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு திமுக வினர் நினைத்திருந்தால் அப்போதே தீர்வு கண்டிருக்க முடியும். ஆனால் இப்போது நாடகம் ஆடுகின்றனர். 7 பேர் விடுதலையில் அதிமுக உறுதியாக உள்ளது. விரைவில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என நம்புகிறோம்.
மு.க.அழகிரியின் அரசியல் மறுபிரவேசம் எங்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ இல்லையோ, திமுகவில் நிச்சயம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். முன்னாள் அமைச்சர் பூங்கோதைக்கு நடந்த நிகழ்வே திமுகவில் அளிக்கப்படும் மரியாதையின் லட்சணத்திற்கும், அங்குள்ள உள்கட்சி பூசலுக்கும் எடுத்துக்காட்டு.
அமித் ஷா வருகைக்கும் நாளை நடக்கவுள்ள அதிமுக கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது வரை கூட்டணிக்குள் எந்தவொரு பாதிப்பும் இல்லை. தொகுதி ஒதுக்கீடு பற்றியெல்லாம் தகுந்த நேரத்தில் கட்சி முடிவு செய்யும். முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான், அதிமுக தலைமையில்தான் கூட்டணி என்பதை கூட்டணியில் அங்கம் வகிப்பவர்கள் ஏற்கத்தான் வேண்டும் ” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் பரப்புரையை தொடங்கிய திமுக!