சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது, ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரில் நளினி தவிர பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோரின் கருணை மனுக்களை நிராகரித்தார். ஆனால், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில் அதிமுக அரசு உறுதியாக இருக்கிறது.
7 பேர் விடுதலை குறித்து திமுக தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களை தெரிவித்து வருகிறது. ஆளுநரை சந்திக்கும்போதெல்லாம், 7 பேரையும் விடுதலை செய்யுமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். திமுக ஆட்சிக் காலத்தில் அவர்களின் விடுதலைக்கு எதிராக செயல்பட்டவர்கள், தற்போது அரசியல் ஆதாயத்திற்காக பொய்யான, தவறான தகவல்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். இவ்விவகாரத்தில் ஆளுநர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார்” என நம்பிக்கை தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா பேரவையில் தாக்கல்!