சென்னை: பழுப்பு நிலக்கரி சுரங்கம் மற்றும் மின் உற்பத்தி திட்டத்துக்காக அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டத்தில் 13 கிராமங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, குறிப்பிட்ட 13 கிராமங்களைச் சேர்ந்த மக்கள், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர். பின்னர் கிராம மக்களின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "வரலாற்றில் இல்லாத வகையில் அரசு கையகப்படுத்திய நிலத்தை பொதுமக்களிடம் திருப்பி அளித்துள்ளது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி இதனை விசாரிக்க இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்து விசாரணையை தீவிரப்படுத்தினார். 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' பரப்புரை பயணத்தின்போது ஜெயம்கொண்டம் வந்த முதலமைச்சர் ஸ்டாலினிடம் அப்பகுதிவாசிகள் கோரிக்கை வைத்ததைத் தொடர்ந்து, கையகப்படுத்தப்பட்ட நிலத்தை மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் அப்பகுதிவாசிகளுக்கு பட்டா அளிக்கப்பட்ட பின், மின் இணைப்பு தொகுப்பு வீடுகள் அளிக்கப்படுவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். முதலமைச்சர் நேரடியாக வந்து பட்டா அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்" என்று தெரிவித்தார்.
பின்னர் பேசிய அப்பகுதிவாசி முருகேசன், "25 ஆண்டுகளாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்படாத நிலையில், தற்போது அரசாணை வெளியிட்டு கையகப்படுத்தப்பட்ட 8 ஆயிரத்து 750 ஏக்கர் நிலம் மீண்டும் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு, தொகுப்பு வீடு உள்ளிட்டவற்றை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்" என்று கூறினார்.
இதையும் படிங்க: திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கருணாநிதிக்கு சிலையா?.. ஹெச்.ராஜா கேள்வி