ஊரடங்கு தளர்வுகளின் அடுத்தக்கட்டமாக செப்டம்பர் 7 ஆம் தேதி முதல், மாவட்டங்களுக்கு இடையே அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், செப்டம்பர் 7 முதல் பேருந்துகளை இயக்க இயலாது என, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன், ”கடந்த மார்ச் மாத இறுதியில் இருந்து பேருந்துகள் இயக்கப்படவில்லை.
நீண்ட நாள்களாகப் பேருந்துகள் இயக்கப்படாததால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளோம். தற்போது மீண்டும் பேருந்துகளை இயக்க 4 லட்ச ரூபாய் வரை செலவாகும். எனவே, பேருந்துகள் ஓடாத 5 மாத காலத்திற்குச் சாலை வரியை ரத்துசெய்ய வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்துவருகிறோம்.
இது தொடர்பாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் அரசிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இருப்பினும் அரசு இது குறித்து சாதகமான முடிவு எதையும் இதுவரை எடுக்கவில்லை. ஆகவே, இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கரோனா விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்: அமைச்சர் விஜயபாஸ்கர்!