சென்னை: தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் காரணமாக பள்ளிகள் நடப்பாண்டு முழுவதுமாக திறக்கப்படவில்லை. 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்களுக்கான நேரடி வகுப்புகளை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறப்பதற்கு அரசு உத்தேசித்துள்ளது.
நீட் தேர்வு குறித்த சுற்றறிக்கை
இந்நிலையில் மாணவர்களுக்கான குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தை பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் வெளியிட்டு, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், பள்ளிகள் திறக்கப்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை ஆணையர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கையாக அனுப்பியிருக்கிறார்.
அதில், நடப்பு கல்வியாண்டில் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகக்கூடிய மாணவர்கள் அவர்களாகவே தயாராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு சார்பில் கடந்த மூன்று ஆண்டுகளாக நீட் போட்டித் தேர்வுக்கு அரசுப் பள்ளி மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் நீட் தேர்வு எழுதவுள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முறையாக நீட் தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்படவில்லை. நீட் தேர்வு கூடாது என்பது தமிழ்நாடு அரசின் நிலைப்பாடாக உள்ளதால் அதற்கு முரணாக நீட் பயிற்சி அளிப்பது சரியான நடைமுறையாக இருக்காது என தமிழ்நாடு அரசு கருதுவதாக பள்ளிக் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ரத்தாகுமா நீட் தேர்வு பயிற்சி?
தற்போது பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் மாணவர்கள் எழுத விரும்பும் போட்டி தேர்வுகளுக்குத் தாங்களாகவே தயாராக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரசு சார்பில் வழங்கப்பட்டு வந்த நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் 2022ஆம் ஆண்டில் எழுத விரும்பும் மாணவர்களுக்கு அளிக்கப்படுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.
இந்தக் குழப்பத்தை தீர்க்கும் வகையில் கடந்த ஆண்டுகளைப் போலவே நடப்பாண்டிலும் நீட் தேர்வு எழுத விரும்பும் மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நீட் தேர்வு: சொற்ப எண்ணிக்கையிலான அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ள அவலம்!