தமிழ்நாட்டிலுள்ள 35 ஆயிரம் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில், 45 லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் தமிழ் வழியிலும், அதிகளவான மாணவர்கள் ஆங்கில வழியிலும் படித்து வருகின்றனர்.
தமிழ் வழியில் படிக்கக்கூடிய மாணவர்களுக்கு முழுவதும் இலவசமாக கல்வி அளிக்கப்படுகிறது. எவ்விதமான கட்டணங்களும் வசூலிக்கப்படுவதில்லை. அதே நேரத்தில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு, ஆண்டு கல்விக் கட்டணமாக 250 ரூபாய் வரை வசூலிக்கப்படுகிறது. ஆங்கில வழியில் படிக்கும் கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படும் என சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார்.
அதன்படி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் அரசாணை வெளியிட்டுள்ளார். இந்த அரசாணை நடப்பு கல்வி ஆண்டிலேயே அமலுக்கு வரும் என அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு அம்சமாக ஆங்கில வழிக்கல்விக்கு மிகுந்த ஊக்கம் அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அரசுப் பள்ளிகளில் மாணவர்களை அதிகரிக்கச் செய்யும் வகையில், ஆங்கில வழிக் கல்விக்கான கல்விக் கட்டணம் ரத்து செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அரசின் இந்த அறிவிப்பு காரணமாக, இரண்டு லட்சம் மாணவர்கள் வரை பயனடைவார்கள் என்றும் கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.