சென்னை : 12 ம் வகுப்பு முடித்தவர்கள், நுழைவுத் தேர்வு மூலம் பிஆர்க் பட்டப்படிப்புக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். பிஆர்க் பட்டப்படிப்பில் 2016-17 ம் கல்வியாண்டில் அண்ணா பல்கலைக் கழகத்தில் அனுமதிக்கப்பட்ட 117 இடங்களிலும், 2017-18 ம் கல்வியாண்டில் 118 இடங்களிலும், 2018-19 கல்வியாண்டில் 118 இடங்களிலும் ஒரு அரசுப் பள்ளி மாணவரும் சேரவில்லை.
2019-20 ம் கல்வியாண்டில் 66 இடங்களில் ஒரே ஒரு அரசுப் பள்ளி மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். 2020-21 ம் கல்வியாண்டில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரும் சேரவில்லை.
3 மாணவர்கள் சேர்க்கை
அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 5 ஆண்டுகளில் 3 மாணவர்கள் மட்டும் சேர்ந்துள்ளனர். சுயநிதி பொறியியல் கல்லூரியில் 5 ஆண்டுகளில் 84 பேர் மட்டுமே சேர்ந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அரசுப் பள்ளி மாணவர்கள் சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் 2016-17 ம் கல்வியாண்டில் 1899 இடங்களில் 20 பேரும், 2017-18 கல்வியாண்டில் 2098 இடங்களில் 8 பேரும் சேர்ந்துள்ளனர்.
2018-19 ம் கல்வியாண்டில் 1787 இடங்களில் 12 பேரும், 2019-20 ம் கல்வியாண்டில் 1738 இடங்களில் 24 பேரும், 2020-21 ம் கல்வியாண்டில் 1738 இடங்களில் 20 பேரும் சேர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
வேலைவாய்ப்பு
தொழிற்கல்வி பட்டப் படிப்புகளில் தனியார் பள்ளியில் படித்த மாணவர்களே அதிக இடங்களை அள்ளிச் சென்றுள்ளனர். இது போன்ற படிப்புகளை படித்தால் வேலை வாய்ப்பு கிடைக்காது என்ற ஏழை எளிய குடும்பங்களில் இருந்து அரசு பள்ளியில் படிக்க வைக்கும் பெற்றோர் மனநிலையே காரணம் என தெரிகிறது.
விழிப்புணர்வு தேவை
தொழிற்கல்வி படிப்புகள் எந்தெந்த கல்லூரிகளில் உள்ளது என்பது குறித்தும், வேலைவாய்ப்பு குறித்தும் அரசுப் பள்ளி மாணவர்களின் பெற்றோர்களுக்கு முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே கல்வியாளர்களின் கருத்தாக உள்ளது.
இதையும் படிங்க :ஓபிசி வகுப்பினருக்கு 27 % இட ஒதுக்கீடு: மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மைச் செயலாளர் கடிதம்