சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் வடகிழக்குப்பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் துறை அலுவலர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,
'தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளும் வகையில் மின்விநியோகத்தில் எந்தப் பாதிப்பும் இன்றி சீரான மின் விநியோகத்தை வழங்க ஆய்வுக்கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. மழைக்காலத்தை எதிர்கொள்ள அலுவலர்களுக்குப் பல்வேறு வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டில் மழைக்காலம் என்பதால் அவ்வப்போது மின் நிறுத்தம் செய்யப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் 143 இடங்களில் மின்விநியோகம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து உடனடியாக சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மின்சாரம் தற்போது தடையின்றி வழங்கப்பட்டுள்ளது.
பருவமழை காலத்தை எதிர்கொள்ள 1 லட்சத்து 40 ஆயிரம் மின்கம்பங்களும் 9,000 கி.மீ., மின்கம்பிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சீரான முறையில் மின்விநியோகம் செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.
அதேபோல், தமிழ்நாட்டின் மின் தயாரிப்புக்குத்தேவையான 10 முதல் 11 நாட்கள் வரையிலான நிலக்கரி கையிருப்பு உள்ளது. கடந்த ஆட்சியில் நிலக்கரி காணாமல் போனதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், துறை ரீதியாக அமைக்கப்பட்டிருந்த குழு அதனுடைய அறிக்கையினை தற்பொழுது சமர்ப்பித்துள்ளது. அதில் நிலக்கரி காணாமல் போனது உண்மைதான்.
அந்த அறிக்கையில் எந்தெந்த காலகட்டத்தில் நிலக்கரி காணாமல் போய் உள்ளது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக இந்த ஆய்வறிக்கை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் சமர்ப்பிக்க உள்ளோம்.
தற்போதைய நிலையில் மத்திய அரசு நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தொகையில், நிலுவைத்தொகை இல்லை. மின்வாரிய காலிப்பணியிடங்களில் குறிப்பிட்ட பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலமாகவும் மீதமுள்ள பணியிடங்கள் மின்வாரியத்தின் மூலமும் நேரடியாகவே நிரப்பப்படும்.
எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்கள் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டுகோள் விடுத்திருந்தனர். அவர்களது கோரிக்கையை ஏற்று சிறு நிறுவனங்களுக்கான நிலைக் கட்டணத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
பின்னர் வடசென்னையில் நேற்று ஒரு பெண் மின்சாரம் தாக்கி சம்பவம் குறித்த கேள்விக்கு, “சம்பவம் நடந்த இடத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு தான் இருந்தது. இருப்பினும் அதிகப்படியான மழை நீர் தேங்கி இருந்த நிலையில் மாநகராட்சியின் சாலை விளக்குகளில் மின்னிறுத்தம் செய்யப்படாததால் மின் கசிவு ஏற்பட்டு இந்த விபத்து நடந்துள்ளது. வரும் காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாநகராட்சி இடமும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி சென்ற காட்டாற்று வெள்ளம்... போக்குவரத்து துண்டிப்பு!