புதுச்சேரி கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வார்டில் கரோனாவால் உயிரிழந்த உடல்கள் மூடி வைக்கப்பட்டுள்ளதாக குற்றசாட்டு எழுந்தது. இந்நிலையில், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஆய்வு செய்தார்.
இறந்தவர்களின் உடல் நோயாளிகளுடன் கிடத்தப்பட்டு இருந்ததாக வெளியான செய்திகளுக்கு பதில் அளித்த அவர், "உயிரிழந்தவர்களின் உடல்கள் சிறப்பு கவசத்தோடு கோவிட் நெறிமுறைகளை பின்பற்றி தான் எடுக்க முடியும். உடனே உடல்களை அகற்றினால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே மற்றவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடல்கள் அங்கேயே வைக்கப்பட்டிருந்தன. அந்த நேரத்தில் செவிலியர்கள் எவ்வளவு சிரமப்பட்டு பணியாற்றி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேலும் படுக்கை இல்லை என நோயாளிகளை திருப்பி அனுப்பாமல், தரையில் படுக்க வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார். அங்கு கூடுதல் படுக்கை வசதிகள் செய்ய உத்தரவிட்டுள்ளேன்".
அதேபோல் ஒரு சிலிண்டரில் 3 பேருக்கு ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது தொடர்பாக பதில் அளித்த அவர், பெரிய சிலிண்டரில் இருந்து 5 முதல் ஆறு பேருக்கு அக்சிஜன் கொடுக்கலாம் என அவர் கூறினார். பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் மக்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தாமல், விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனறும் தமிழிசை கேட்டுக்கொண்டார்.