நாடு முழுவதும் மூடப்பட்டுள்ள திரையரங்கங்களை 50% இருக்கைகளுடன் வரும் 15ஆம் தேதிமுதல் திறக்க அனுமதி அளித்துள்ள மத்திய அரசு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் இன்று அறிவித்துள்ளது.
இந்நிலையில், கலைவாணர் அரங்கில் எழுதுபொருள் அச்சுத் துறை தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றபின் செய்தியாளர்களைச் சந்தித்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, ”திரையரங்கில் 3 மணி நேரம் ஒரே இடத்தில் கூட்டமாக இருக்க வேண்டிய நிலை உள்ளது.
கரோனா பாதிப்பு இப்போதுதான் கட்டுக்குள் வரத் தொடங்கியிருக்கிறது. எனவே, இதை எல்லாம் கருத்தில்கொண்டு சுகாதாரக் குழுவுடன் ஆலோசித்து திரையரங்குகள் திறப்பது குறித்து நல்ல முடிவு அறிவிக்கப்படும்“ என்று கூறினார்.
தொடர்ந்து, அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் நாளை அறிவிக்கப்பட இருப்பது குறித்த கேள்விக்கு, எங்களுக்கும் உங்களைப் போன்றே நாளை முடிவு அறிவித்த பின்புதான் தெரியவரும் என்றார்.
ஓடிடியில் படம் வெளியாவது குறித்து பேசிய அமைச்சர், திரையரங்கு சென்று படம் பார்த்தால்தான் மக்களுக்குப் படம் பார்த்த திருப்தி இருக்கும் என்றார். மேலும், ஊரடங்கு கால தற்காலிக ஏற்பாடாக ஓடிடியில் படங்களை வெளியிடலாமே தவிர, அதையே நிரந்தரமாக்கினால் திரைத் துறை பாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ’பள்ளிகள் திறப்பு குறித்து முதலமைச்சர் அறிவிப்பார்’ - அமைச்சர் செங்கோட்டையன்