சென்னை: கரோனா நோய்த்தொற்று காரணமாக சர்வதேச விமான போக்குவரத்து நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டுவர, வந்தே பாரத் என்ற பெயரில் மீட்பு விமானங்கள் மட்டும் இயக்கப்படுகின்றன.
இன்று (அக். 1) காலை துபாயிலிருந்து 2 வந்தே பாரத் மீட்பு விமானங்கள் 214 இந்தியா்களுடன் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தன. அதில் வந்த பயணிகளைச் சுங்கத் துறையினா் சோதனை செய்தனர்.
அப்போது 2 பெண் பயணிகள் உள்பட 14 பயணிகள் மீது சுங்கத் துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டது. இவர்கள் சென்னை, ராமநாதபுரம், திருச்சி, புதுக்கோட்டை, ஆந்திரா ஆகிய பகுதிகளைச் சோ்ந்தவர்கள்.
இவர்களைத் தீவிரமாகச் சோதனை செய்ததில், அவர்களிடமிருந்து மொத்தம் இரண்டு கிலோ 82 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இவற்றின் சர்வதேச மதிப்பு 1.48 கோடி ரூபாய்.
இதனைத் தெடர்ந்து 14 பேரையும் கைதுசெய்த சுங்கத் துறை விசாரணை நடத்திவருகின்றது. துபாயில் 6 மாதங்களுக்கு மேல் சிக்கித் தவித்தவா்களை மீட்டுவந்த விமானங்களில் தங்கம் கடத்திவந்தது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க : சென்னை: சட்டவிரோதமாக சூதாட்டம்... ஏழு பேர் கைது