சென்னை: சென்னை பன்னாட்டு விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் பெரும் அளவு தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை கமிஷனர் உதய் பாஸ்கருக்குத் தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் சுங்கத் துறை அதிகாரிகள் துபாயிலிருந்து வந்து விமானத்தில் பயணம் செய்தவர்களைக் கண்காணித்தனர்.
அப்போது திருச்சியைச் சேர்ந்த அப்துல் பாசித் (வயது-32) சிவகங்கையைச் சேர்ந்த சாகுல் அமீது(வயது-34) தேனியைச் சேர்ந்த சரவணன்(வயது-33) ஆகிய 3 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பேசியதால் உடைமைகளைச் சோதனை செய்தனர். அதில் அப்துல் பாசித் பழைய ஒலி பெருக்கி வைத்திருந்தார்.
அதைப் பிரித்துப் பார்த்த போது அதில் டிரான்ஸ்பார்மரில் தங்கத்தை மறைத்து வைத்து இருந்ததை கண்டு பிடித்தனர். அதுபோல் சரவணன், சாகுல் அமீது ஆகியோர் உடைமைகளுக்கு நடுவே தங்கம் மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். இவர்களிடம் இருந்து வெளிநாட்டு சிகரெட்டுகள், ஐபோன்கள்,மின்சாதன பொருட்கள் இருந்தன.
அந்த 3 பேரிடம் இருந்து ரூ. 1 கோடியே 46 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 935 கிராம் தங்கம், சிகரெட்டுகள், ஐபோன்கள், மின்சாதன பொருட்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:கத்தியுடன் சுற்றித்திரிந்த இரண்டு ரவுடிகள் கைது...!