சென்னை விமான நிலையத்திற்கு பெரியளவில் கடத்தல் பொருள்கள் கொண்டு வரப்படுவதாக விமான நிலைய சுங்கத்துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது, கொழும்புவில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த வாசுதேவன்(34) என்பவரை சந்தேகத்தின் பேரில் சுங்கத்துறையினர் விசாரித்தனர். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் ஆடைகளுக்குள் 29 தங்க துண்டுகளை மறைத்து வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். அவரிடமிருந்து ரூ. 25 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள 623 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதேபோல் துபாயிலிருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த சென்னையைச் சேர்ந்த நூர் முகமது(24), திருச்சியைச் சேர்ந்த சாகுல் அமீது(37), ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹைதர் அலி(56) ஆகியோரிடமும் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அவர்களின் உடமைகளில் எதுவும் இல்லாததால், தனியறைக்கு அழைத்துச் சென்று அவர்களிடம் சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். மூன்று பேரிடமிருந்து ரூ. 42 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ தங்கத்தை கைப்பற்றினார்கள்.
நான்கு பேரிடமிருந்து மொத்தம் ரூ. 67 லட்சத்து 78 ஆயிரம் மதிப்புள்ள ஒரு கிலோ 623 கிராம் தங்கத்தை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். இந்தத் தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது, இதன் பின்னணியில் யார் உள்ளனர் என்பது குறித்து சுங்கத் துறையினர் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.
இதையும் படிங்க: பேருந்து ஓட்டுநரைத் தாக்கிய கும்பல் - நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்