சென்னை: பிரதமர் மோடியின் 72ஆவது பிறந்த நாளை பாஜகவினர் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடினர். அதன்படி பாஜகவினர் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை பரிசளித்தனர்.
இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் ஒரு பகுதியாக சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், குழந்தைகளுடன் மோடியின் பிறந்தநாள் நிகழ்ச்சியை கொண்டாடினார்.
அப்பொழுது இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ”கடந்த இரண்டு ஆண்டுகள் கரோனா தொற்று காரணமாக பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாடப்படாமல் இருந்தது. இதனால் இந்த ஆண்டு மோடியின் பிறந்த நாளை பெரும் விமரிசையாக கொண்டாட வேண்டுமென ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. அதன் ஒரு பகுதியாகவே அரசு மருத்துவமனையில், பிரதமர் மோடி பிறந்த தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்பட்டது.
மேலும் மாநிலம் முழுவதும் மாரத்தான் போட்டி, கபடி போட்டி, மாட்டு வண்டி போட்டி, கடற்கரையை சுத்தம் செய்யும் தூய்மை நிகழ்ச்சி உள்ளிட்டப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன’ என்றார்.
மோடியின் பிறந்த நாளை வேற்றுமையில் ஒற்றுமை என்ற நிகழ்ச்சி மூலம் இரண்டு வாரம் இந்த நிகழ்ச்சியை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்த உள்ளதாக பாஜகவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கேரளாவில் தாய்ப்பால் வங்கி திட்டம்... மேலும் 2 மருத்துவமனைகளில் அறிமுகம்...