சென்னை: இலங்கையிலிருந்து ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் நேற்று இரவு சென்னை சா்வதேச விமானநிலையத்திற்கு வந்தது. அவ்விமானம் மீண்டும் புறப்படுவதற்கு முன்பாக விமான நிலைய ஊழியர்கள், விமானத்தை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது விமானத்திற்குள் ஒரு சீட்டின் கவா் மேலே தூக்கிக்கொண்டிருந்தது. அதை ஊழியா்கள் சரி செய்ய முயன்றபோது, அதற்குள் 3 பாா்சல்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்தனா். உடனே விமானநிலைய மேலாளருக்கு தகவல் கொடுத்தனா். இதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து சென் பாா்சல்களை சோதனையிட்டபோது உள்ளே தங்கக்கட்டிகள் இருப்பது தெரியவந்தது.
தங்கத்தின் மதிப்பு
அப்பார்சல்களை விமான நிலைய அலுவலர்கள், சுங்கத் துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். சுங்கத் துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில், 3 பாா்சல்களிலும் 592 கிராம் தங்கம் இருந்ததைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனா். அதன் மதிப்பு ரூ.25.7 லட்சம் என கூறப்படுகிறது. இதையடுத்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனா்.
இதனிடையே துபாயிலிருந்து ஏா்இந்தியா விமானம் சென்னை சா்வதேச விமானநிலையம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்கத் துறையினர் சோதனையிட்டனா். அப்போது ராமநாதபுரத்தைச் சோ்ந்த ஒரு ஆண் பயணி மீது சந்தேகம் ஏற்பட்டது.
எனவே, அவரை நிறுத்தி சோதனையிட்டனா். அவருடைய சூட்கேஸுகுள் ஒரு டேப்லட் மறைத்து வைத்திருந்தாா். அதை எடுத்து கழட்டிப் பார்த்த அலுவலர்கள், அதற்குள் தங்கத் தகடுகள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டறிந்தனர். 510 கிராம் எடை கொண்ட அத்தங்கத் தகடுகளை அலுவலர்கள் கைப்பற்றினா். அதன் மதிப்பு ரூ.22.13 லட்சம் எனத் தெரிகிறது. அத்துடன் அப்பயணியிடமிருந்து 9.5 லட்சம் மதிப்பிலான மின்னணு சாதனங்களையும் கைப்பற்றி, அவரை கைது செய்தனா்.
இந்நிலையில், இன்று காலை சென்னை சா்வதேச விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் ஃபிளை துபாய் ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாரானது. அவ்விமானத்தில் பெருமளவு வெளிநாட்டுப் பணம் கடத்தப்படுவதாக பெங்களூரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத் துறையிலிருந்து சென்னை விமான நிலைய சுங்கத்துறைக்கு ரகசிய தகவல் வந்தது.
இதையடுத்து சுங்கத் துறையினா் அந்த விமான பயணிகள் அனைவரையும் சோதனையிட்டனா். அப்போது கா்நாடகா மாநிலத்தை சோ்ந்த ஒரு ஆண் பயணியின் சூட்கேஸுக்குள் உணவு பொருள் அடங்கிய 3 பாக்கெட்கள் இருந்தன. அலுவலர்கள் அதைப் பிரித்து பாா்த்தபோது கட்டுக்கட்டாக சவுதி ரியால் வெளிநாட்டுப் பணம் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் இந்திய மதிப்பு ரூ.20 லட்சம். வெளிநாட்டுப் பணத்தை பறிமுதல் செய்து, கா்நாடகா பயணியை கைது செய்தனா்.
இதையும் படிங்க: சென்னை விமான நிலையத்தில் ரூ.30 லட்சம் தங்கம் பறிமுதல்!